×

ஏடிபி தரவரிசை 5ம் இடத்திற்கு முன்னேறினார் நடால்

லண்டன்: ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றதன் மூலம், ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால் ஏடிபி தரவரிசையில் 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸி.ஓபன் போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் பட்டத்தை ஆஸி.வீராங்கனை ஆஷ்லீ பார்டியும் கைப்பற்றியுள்ளனர். காயம் காரணமாக கடந்த 6 மாதங்களாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ரஃபேல் நடால் பங்கேற்கவில்லை. இருப்பினும் ஒருபுறம் டென்னிஸ் பயிற்சிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த அவர், நேரடியாக ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்றார். பைனலில் ரஷ்யவீரர் டேனில் மெட்வடேவை 5 செட்களில் போராடி வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 21வது ஒற்றையர் பட்டம் என்ற புதிய சிகரத்தையும் எட்டினார். ஏடிபி தரவரிசையில் இந்த ஆண்டு துவக்கத்தில் 4,875 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் இருந்த ரஃபேல் நடால், இந்த வெற்றியின் மூலம் தற்போது 6,875 புள்ளிகளுடன் 5 ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸி. ஓபன் அரையிறுதியில் தோல்வியடைந்த கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ், 7,170 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் மிகக் குறைவு என்பதால், அடுத்த ஏடிபி டோர்னமென்ட்டில் நடாலின் சிறப்பான ஆட்டம் தொடர்ந்தால், 4ம் இடத்தை அவர் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட மறுத்ததால் ஆஸி. ஓபனில் பங்கேற்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஏடிபி தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 11,015 புள்ளிகளுடன் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸி. ஓபனில் ரன்னர் கோப்பை வென்ற ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் 10,125 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறார். ஜெர்மனியின் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் 7,780 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆஸி.ஓபன் ஒற்றையர் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி, 8,331 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இவருடன் பைனலில் மோதிய அமெரிக்க வீராங்கனை டேனியல் கோலின்ஸ், 20 இடங்கள் முன்னேறி, தரவரிசையில் 3,071 புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளார். டாப் டென்னில் இவர் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஏடிபி தரவரிசை 5ம் இடத்திற்கு முன்னேறினார் நடால் appeared first on Dinakaran.

Tags : Nadal ,ATP ,London ,Aussie ,Open Grand Slam ,Rafael Nadal ,Dinakaran ,
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி